கொழுப்பெனும் நண்பன் 13

/files/detail1.png

கொழுப்பெனும் நண்பன் 13

  • 3
  • 0

-அ.ப.ஃபரூக் அப்துல்லா

நீங்கள் உடல் எடை அதிகமாக இருப்பதை உணர்கிறீர்கள். எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதற்காக நீங்கள் என்னென்ன முயற்சிகள் எடுப்பீர்கள்? 

இப்படி ஒரு கேள்வியை மக்களிடம் கேட்டால் பெரும்பாலும் வரும் பதில்

நான் சப்பாத்தி உண்ணும் டயட் எடுப்பேன்.  தினமும் ஒரு மணிநேரம் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செல்வேன். முடிந்தால் ஜிம் சென்று உடல் எடை குறைக்கும் பயிற்சிகளை செய்வேன் என்பார்கள். சிலர் நான் சில ஆயுர்வேத ப்ரோட்டின் பவுடர்களை வாங்கி குடிப்பேன். எடை தானாக குறைந்து விடுப்போகிறது என்பார்கள். இன்னும் சிலர் பேரியாட்ரிக் சர்ஜரி எனும் உடல் எடையை குறைக்கும் சர்ஜரியை செய்து கொள்வேன் என்று கூட கூறலாம். இவை எல்லாவற்றையும் விட உடல் எடை குறைய பேலியோ எப்படி ஆரோக்கியமானது ? என்பதை காண்போம் வாருங்கள். 

நீங்கள் உண்ணும் உணவையே தினசரி குறைத்து உண்ணும் உணவு முறைக்கு மாறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதாவது ஒரு நாளைக்கு காலை- ஐந்து இட்லி / நான்கு தோசை என்று சாப்பிட்ட இடத்தில் மூன்று இட்லி / இரண்டு தோசை என்று குறைத்து உண்கிறீர்கள். 

மதியம் சாதத்திற்கு பதில் இரண்டு சப்பாத்தி கூட கொஞ்சம் காய்கறி. இரவு - இரண்டு சப்பாத்தி. இந்த டயட்டிலும் நிச்சயம் எடை குறையும் ஆனால் இந்த கலோரி குறைந்த உணவு முறையை எத்தனை நாள் தொடர்ந்து எடுக்க முடியும்? மிஞ்சிப்போனால் ஒரு மாதம் கூட எடுக்க முடியாது. காரணம் நம்மால் தொடர்ந்து கலோரி குறைவான உணவு முறையை தொடர முடியாது. மேலும், காலை உணவை குறைத்து சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றால் மதிய உணவு வேளையை எட்டுவதற்கு முன்பே பசி எடுத்து வெளியே சென்று வடை பஜ்ஜியுடன் டீ பருக வேண்டிய நிலை வரும். 
எனவே இந்த கலோரி குறைவான உணவு முறை ஒத்துவராது. சரி நான் உடல் பயிற்சி செய்து எடை குறைகிறேன் என்றால் நீங்கள் என்னதான் வேகமாக நடந்தாலும் சரி.. ஒரு மணிநேரம் நடந்தாலும் 300 கிலோ கலோரிகள் மட்டுமே எரிக்க முடியும்.  பருமனான உடலை வைத்துக்கொண்டு உங்களால் ஓடவும் முடியாது. இப்படி தினமும் நடந்து உடல் எடை குறைத்தாலும்.. இந்த உடல் பயிற்சியை எப்போது நிறுத்துகிறீர்களோ அப்போது உடல் எடை மீண்டும் ஏறும்.

என்னிடம் இப்போது நிறைய பணம் இருக்கிறது. நான் தினமும் நான் மூலிகை ப்ரோட்டின் பவுடரை ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்கி குடிக்கிறேன். மூன்று மாதத்தில் இருபது கிலோ எடை சட்டென குறையும். ஆனால் எப்போது பர்ஸ் கரைந்து அந்த பவுடரை வாங்கி குடிப்பதை நிறுத்துகிறோமோ அப்போது மீண்டும் எடை முன்னரை விட அதிகமாக ஏறும். முன்னர் மூன்று மாதங்களில் இருபது கிலோ குறைந்ததென்றால், அந்த பவுடரை குடிக்காமல் விட்ட ஒரே மாதத்தில் பத்து கிலோ ஏறி மூன்று மாதத்தில் முப்பது கிலோ ஏறிவிடும். பணம் மட்டும் தான் செலவாகியிருக்கும். வாழ்க்கை முழுவதும் அந்த பவுடரை குடிப்பது என்பது சாத்தியம் இல்லாதது தானே.

சரி கடைசி ஆப்சனாக நான் பெரிய மருத்துவமனயில் அட்மிட் ஆகி பேரியாட்ரிக் சர்ஜரி எனும் உடல் பருமன் குறைப்பு சர்ஜரி செய்து கொள்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். பேரியாட்ரிக் சர்ஜரியில் என்ன செய்கிறார்கள் ? 

நமது வயிற்றின் ஒரு பகுதியை வெட்டி குடலின் ஒரு பகுதியுடன் சேர்த்துவிடுகிறார்கள் அல்லது வயிற்றை பலூன் கொண்டு ஊதி அடைத்து விடுகிறார்கள் அல்லது பேண்ட் போட்டு வயிற்றின் பகுதிகளை சுருக்கிவிடுகிறார்கள். உடலில் சேர்ந்த   கொழுப்பை உறுஞ்சி எடுக்கிறார்கள். இதற்கு லிப்போ சக்க்ஷன் என்று பெயர். இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்து செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சைகளில் பல சிக்கல்கள் உண்டு. குண்டான மனிதர்களுக்கு மயக்க மருந்து கொடுப்பதே பெரிய கடினமான வேலை. மேலும் இந்த அறுவை சிகிச்சை உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். சரி நல்ல முறையில் சர்ஜரி நடந்து விட்டது. முதல் ஓராண்டில் ஐம்பது கிலோ கூட குறையும் ஆனால் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் உடல் எடை கூடுவதை காண முடிகிறது. இதற்காக மறுமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கதையும் உண்டு.

இப்படி உடல் எடையை குறைக்க அனுதினமும் தங்களின் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பலரும் பணயம் வைத்தபடி உள்ளனர். 

உண்மையில் உடல் எடை கூடுவதன் முதன்மை காரணம் நமது உணவில் உள்ள மாவுசத்தின் ஆதிக்கம் தான். 

தினமும் 300 முதல் 400 கிராம் மாவுச்சத்து உண்பதால் நமது ரத்தத்தில் இன்சுலின் அதிகமாக சுரந்து அதனால் இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் வருகிறது. இது தான் நாம் குண்டாவதற்கான முதன்மை காரணம். நாம் குண்டாவதன் அறிவியல் விளக்கங்களை சென்ற பகுதியில் விளக்கியிருந்தேன்.

லெப்டின் மற்றும் க்ரெலின் ஆகிய இரண்டு ஹார்மோன்களின் சமவிகிதாச்சாரத்தில் நடக்கும் பிரச்சனையே நமக்கு பசியை அதிகம் தூண்டி சாப்பிட வைத்து திருப்தி ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்கிறது.

இதனால் தான் நாம் குண்டாகிறோம். இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். நீங்கள் மாவுச்சத்து உணவுகளை குறைத்து உண்ணச்சொல்கிறீர்கள்.. சரி.. எங்களின் முன்னோர்கள் இதே அரிசி உணவை தானே சாப்பிட்டார்கள். பிறகு ஏன் அவர்களுக்கு வராத உடல் பருமன் எங்களுக்கு மட்டும் வருகிறது? 

இது ஒரு நல்ல கேள்விதான். இதற்கான பதிலை அறிய நாம் அரை நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.  1960களுக்கு முன்பு வரை நமது விவசாயம் இத்தனை மகசூலை தரவில்லை. 1960-70 களில் ஏற்பட்ட பசுமை புரட்சி , வெண்மைப்புரட்சி இவற்றின் விளைவாக நமது வேளாண்மை உற்பத்தி வளர்ச்சி கண்டது. அதற்கு முன்பு வரை ரசாயன உரங்கள் கிடையாது  , பூச்சிக்கொல்லி மருந்துகள் கிடையாது. ட்ராக்டர்கள் கிடையாது. போர் தண்ணீர் கிடையாது.  பம்பு செட் கிடையாது. அதனால் மகசூல் குறைவாகத்தான் வரும்.  பசியும் பஞ்சமும் மாறி மாறி வரும். மூன்று மாதங்கள் விளைந்தால். அடுத்த மூன்று மாதங்கள் ஒன்றுமே இருக்காது. இப்படி பசி பஞ்சம் பார்த்து வந்த நம் முன்னோர்கள் உணவாக உண்டது இரவு ஒரு வேளை உணவே ஆகும். காலை ஒரு வேளை நீராகாரம் மட்டும் பருகி விட்டு சூரியன் உதிப்பது முதல் மறைவது வரை வயக்காட்டில் வேலை செய்வார்கள். ஆகவே அவர்களை நம்மை போன்று இருந்தார்கள் என்று கூறுவது தவறு. 

நமது காலத்தில் பசி பஞ்சமென்றால் என்னவென்றே நமக்கு தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் மாவுச்சத்தை குறைத்து உண்பதே சாலச்சிறந்த எடை குறைப்பு உணவு முறையாகும்

நீங்கள் உண்ணும் உணவில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்சின் அளவை 40 கிராமிற்கு கீழ் உண்டால் உங்களது உடல் கொழுப்பை எரிக்கும் நிலைக்கு செல்லும். உங்கள் உடலில் எடையாக சேர்த்து வைத்திருக்கும் அத்தனை கொழுப்பையும் உடல் எரிபொருளாக எரிக்க ஆரம்பித்து விடும். உடல் எடை குறையும். சரி பேலியோ உணவு முறையில் உடல் எடை குறைக்க என்னவெல்லாம் உண்ணலாம் ? முட்டைகள் , கறி, மீன் , பனீர், நார்ச்சத்துள்ள பச்சை காய்கறிகள் , வெண்ணெய் போன்றவற்றை உண்ணலாம். கலோரி கணக்குகள் பார்த்து உண்ண வேண்டிய அவசியம் இல்லை. வயிறு நிரம்பும் வரை உண்ணலாம். வயிறு நன்றாக நிரம்புவதால் மீண்டும் மீண்டும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய் விடுகிறது. 

பேலியோ உணவு முறையில் மூன்று மாதங்களில் சராசரியாக பத்து கிலோ எடை இழப்பு நிகழும். பெண்களுக்கு சிறிது குறைத்து நிகழும். காரணம் பெண்களுக்கு இருக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன் , அவ்வளவு எளிதாக உடல் எடையை குறைக்க விடாது. இருப்பினும் பெண்களுக்கு சராசரியாக 8 கிலோ எடை மூன்று மாதங்களில் குறையும். பேலியோ உணவு முறையில் எடையை குறைத்து சரியான உடல் எடையை அடைந்தோர் பல லட்சம் பேர் உள்ளனர். அதற்கு நானே ஒரு சான்று. எனது முந்தைய எடையான 100 கிலோவில் இருந்து தற்போது 80 கிலோவிற்கு பேலியோ மூலம் எடையை குறைத்தேன். ஆகவே, உடல் எடையை குறைக்க விரும்புவோர் பேலியோ உணவு முறையை கடைபிடித்து எளிதாக உடல் பருமனிலிருந்து விடுதலை பெறலாம்.

Leave Comments

Comments (0)