‘வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் மநு ஸ்மிரிதி கடைபிடிக்கப்படுகிறது’ – தொல் திருமாவளவன்

/files/dfg 2020-11-04 13:56:42.jpg

‘வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் மநு ஸ்மிரிதி கடைபிடிக்கப்படுகிறது’ – தொல் திருமாவளவன்

  • 158
  • 0


பிரியங்கா திருமூர்த்தி

தமிழில்: கோபி


தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், இப்போதே அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் கருத்தியல் சார்ந்து முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், சமூக – கலாச்சார நடைமுறைகளில் இன்றும் இந்துக்களிடம் மநு ஸ்மிரிதி ஆதிக்கம் செலுத்தி வருகிறது என பேசியது சர்ச்சைக்குள்ளானது. 

செப்டம்பர் 27 அன்று ‘பெரியார் மற்றும் இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் ஐரோப்பிய பெரியார் அம்பேத்கார் தோழர்கள் கூட்டமைப்பு இணைய விவாதம் ஒன்றை ஒருங்கிணைத்தது. அதில் பேசிய திருமாவளவன், மநு ஸ்மிரிதி பெண்களை இழிவுபடுத்துவதாகவும் அவர்களை ‘விபச்சாரிகளாக’ சித்தரிப்பதாகவும் கூறியிருந்தார். இப்படி அவர் கூறியது ‘இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாக’ தமிழக பாஜக-வில் புதிதாக சேர்ந்துள்ள குஷ்பு போராட்டத்தை தொடங்கினார். இதற்காக திருமாவளவன் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் நியுஸ் மினிட்டிற்கு கொடுத்துள்ள நேர்காணலில், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மத வெறுப்பை தூண்ட பாஜக முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாகதான் எனக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை பார்க்க வேண்டும் என்கிறார் திருமாவளவன்.


மேலும் அவர், இன்றைய சமூகத்தில் இன்றும் ஏன் மநு ஸ்மிரிதி முக்கியத்துவம் பெறுகிறது, திருமணத்திற்கு முன்பான உடலுறவு குறித்து குஷ்பு கூறிய கருத்திற்கு தன்னுடைய நிலைப்பாடு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவின் ஆதரவை சமூக ஊடகத்தில் ஏற்றுக்கொண்டது போன்ற பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

மநு ஸ்மிரிதி குறித்து நீங்கள் பேசியதற்கு இத்தகைய எதிர்ப்பு வருமென்று எதிர்பார்த்தீர்களா? 

இதை வைத்து சர்ச்சையை உருவாக்குவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் நான் பேசியதை அப்படியே மாற்றிவிட்டார்கள். பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசுவபவன் அல்ல நான். எங்கள் இயக்கம் பெண்கள் முன்னேற்றத்திற்காக போராடி வருகிறது. பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு (பெண்கள் இடஒதுக்கீடு மசோதா 33% கோருகிறது) வழங்க வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு வருகிறோம். ஆனால் நாங்கள் பெண்களின் எதிரிகள் என பாஜக சித்தரிக்க முயல்கிறது.

விரைவில் வரவுள்ள சட்டசபை தேர்தல்தான் இதற்கு காரணம். திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் எங்களுக்கு எதிராக நடைபெறும் இந்த பிரச்சாரம் குறித்து நாங்கள் கவலைப்படப் போவதில்லை. 

சர்ச்சையை எழுப்புவதுதான் பாஜக-வின் திட்டம் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பாஜக மலிவான அரசியலில் ஈடுபடுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் சாதி மற்றும் மத வெறுப்பை தூண்டி, அதன்மூலம் அரசியல் லாபம் அடைகிறது பாஜக. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவர்களின் அரசியலை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்துக்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் அவர்களின் முக்கிய கோஷமாக உள்ளது. இதே கருத்தைக் கொண்டு வேறு வேறு நபர்களை இலக்காக்கி இப்பிரச்சனைக்கு போராடுகிறார்கள். இதையேதான் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவிக்கு எதிராகவும் (தஞ்சாவூர் பெரிய கோயில் சர்ச்சை), வைரமுத்துவிற்கு எதிராகவும் (முனைவர் பட்டம் வழங்கப்படவில்லை), விஜய் சேதுபதிக்கு எதிராகவும் (கிறிஸ்துவ மதமாற்ற இயக்கம் தொடர்பான குற்றச்சாட்டு) என பலவற்றை கூறலாம். கடந்த இரண்டு வருடங்களில், அவர்களின் போராட்டம் அனைத்தும் இதை ஒட்டியே உள்ளது.

மற்ற பிரச்சனைகள் எதையாவது அவர்கள் கவனத்தில் கொண்டார்களா? சாதி கொலைகளுக்கு எப்போதாவது போராடி இருக்கிறார்களா? இட ஒதுக்கீட்டிற்காக போராடியிருக்கிறார்களா? வங்கிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீட்டை குறைக்கும் உத்தரவு குறித்து இதுவரை ஏதாவது கூறியிருக்கிறார்களா? இதற்காக தமிழ்நாடு முழுவதும் நாங்கள் போராடினோம். இதுபற்றி ஒரு அறிக்கை கூட அவர்கள் கொடுக்கவில்லை. நேர்மறையான மாற்றத்திற்காக அவர்கள் எந்த போராட்டத்தையும் நடத்தியதில்லை. வகுப்புவாத வெறுப்பை தூண்டி அதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள்.

மநு ஸ்மிரிதி பண்டைய நூல் என்றும் அதற்கு தற்போதைய சமூகத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் பலர் கூறுகிறார்களே….

ஒன்று இது அறியாமையாக இருக்கலாம் அல்லது மலிவான அரசியல். வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் மநு ஸ்மிரிதி கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை பிறந்தது முதல், அவர்களுக்கு சாதி அடையாளத்தை ஊட்டி, சாதிய சடங்குகளை கற்றுக் கொடுக்கிறார்கள். அவர்கள் என்ன உடுக்க வேண்டும் முதல் என்ன சாப்பிட வேண்டும் வரை, உறவுகள் முதல் திருமணம் வரை, கடைசியில் இறுதிச் சடங்கு வரை மநு ஸ்மிரிதி பின்பற்றப்படுகிறது. பின் எப்படி முக்கியத்துவம் இல்லை என்று நீங்கள் கூறலாம்?

அரசியல் நிர்வாகத்திற்கும், தேர்தலுக்கும், நீதி அமைப்பிற்கும் மட்டும்தான் அரசியலமைப்பை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சமூக-கலாச்சார அளவில், மநு ஸ்மிரிதியே இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. எந்த அடிப்படையில் ஒரே சாதிக்குள் திருமணம் நடைபெறுகிறது? எதன் அடிப்படையில் பிராமணர்கள் இறுதிச் சடங்குகளை செய்கிறார்கள்? இந்து மதத்திற்குள்ளேயே, ஒவ்வொரு சாதிக்கும் வேறு வேறு சடங்குகளும் நடைமுறைகளும் உள்ளன. பிராமணர்கள் மற்றும் செட்டியார்களின் திருமணங்களில் இருக்கும் வேறுபாட்டை பாருங்கள். அவர்கள் இருவரும் இந்துக்கள் தானே? அனைத்தும் இங்கு வர்னாஸ்ரம அடிப்படையிலேயே நடக்கிறது. இந்துக்கள் இன்றும் அதைப் பின்பற்றுகிறார்கள். இன்றும் கூட, கோயிலின் கர்ப்ப கிரகத்திற்குள் பிராமணர்களே செல்ல வேண்டும் என பிராமணர் அல்லாதவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். எதன் அடிப்படையில் இதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்? ஏன் இதற்கு அவர்கள் போராடவில்லை? சங்கர மடத்தில் பிராமணர்கள் மட்டுமே நிர்வாகம் நடத்த முடியும். இதை எல்லா இந்துக்களும் ஏற்றுக்கொள்கிறார்களா? நாங்களும் சைவத்தை தான் பின்பற்றுகிறோம், ஆகையால் எங்களை ஜகத்குரு ஆக்குங்கள் என எந்த முதலியார் அல்லது பிள்ளைவாள் சாதியினராவது கேட்கிறார்களா? அவர்கள் கேட்பதில்லை, ஏனென்றால் அவர்கள் மநு ஸ்மிரிதியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்துக்களின் அனைத்து கலாச்சார நடைமுறைகளும் மநு ஸ்மிரிதி அடிப்படையில்தான் உள்ளது.  

தேர்தலை மனதில் வைத்துதான் நீங்கள் இப்பிரச்சனையை எழுப்புகிறீர்கள் என பாஜக கூறுகிறதே

இல்லவே இல்லை. ‘பெரியார் மற்றும் இந்திய அரசியல்’ என்ற தலைப்பில் ஐரோப்பிய பெரியார் அம்பேத்கர் தோழர்கள் கூட்டமைப்பு நடத்திய நிகழ்வில் நான் பேசினேன். சமூக நீதி குறித்து பேசுங்கள் என என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நானும் எந்தவித முன்னேற்பாடின்றி பேசினேன். எனது முப்பது ஆண்டு அரசியல் வாழ்க்கையில், மநு ஸ்மிரிதி குறித்து பல முறை பேசியுள்ளேன். மநு ஸ்மிரிதியின் நகலை அம்பேத்கர் எரிக்கவே செய்துள்ளார். அம்பேத்கர் மற்றும் பெரியாரின் ஒட்டுமொத்த சிந்தனை மனு தர்மத்திற்கு எதிராகவே இருந்தது. மநு ஸ்மிரிதி காரணமாகதான் அம்பேதகர் புத்த மதத்தை தழுவினார். ஆகவே இது இப்போது ஏற்பட்ட பிரச்சனை அல்ல. 

மநு ஸ்மிரிதி போன்ற கருத்தியல் சார்ந்த பிரச்சனைகள் வரவுள்ள தேர்தலில் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த தேர்தலில் பிராமணியம் மற்றும் மதப் பிரச்சனைகள் முக்கிய இடத்தைப் பெறும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பாஜக என்ன செய்தாலும், அவர்களின் திட்டம் தமிழ்நாட்டில் வெற்றி பெறாது. சாதி மற்றும் மத வெறுப்பை தூண்ட அவர்கள் திட்டமிடுகிறார்கள். அதிமுக உள்ளிட்ட சில பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் நம்பிக்கையில் அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் அப்படியல்ல. தமிழ்நாட்டில் வகுப்புவாத அரசியலுக்கு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். பாஜக-வை புறக்கணிப்பார்கள். தேர்தலை மனதில் வைத்து ஒருவேளை அவர்கள் தொடர்ந்து பிராமணியம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சனையை எழுப்பினால், அது அவர்களுக்கே பின்னடைவாக முடியும்.

ஆனால் இதை நீங்கள் சுட்டிக் காட்டும்போது, பாலியல் தொழிலோடு ஒப்பிடுகிறீர்கள். இது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. நீங்கள் பயன்படுத்திய விபச்சாரி என்ற வார்த்தையும் பிரச்சனைக்குரியதாக உள்ளது. நீங்கள் இதை ஒத்துக்கொள்கிறீர்களா?

தமிழில் இதை ‘விபச்சார தோஷம்’ என்பார்கள். அதையேதான் நான் ஆங்கிலத்தில் கூறினேன். இது வெறும் விளக்கம் மட்டுமே. நான் நேரடியாக எதையும் மேற்கோள் காட்டவில்லை. மநு ஸ்மிரிதியிலிருந்து நேரடியாக ஒரு செய்யுளை எடுத்து அதை நான் மேற்கோள் காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக மநு ஸ்மிரிதி பெண்களை எப்படி பார்க்கிறது என்பதை நான் சுருக்கமாக கூறியுள்ளேன்.

நூலின் ஒன்பதாவது அத்தியாயம் பெண்களை இப்படிதான் கையாள்கிறது. பெண்களின் இயல்பை -  ஆண்களை மயக்குபவர்கள் - எப்படி விவரித்துள்ளார்கள் என்பதற்கு நான் விளக்கம் கொடுத்துள்ளேன். தமிழில் இதை ‘விபச்சார தோஷம்’ என மொழிபெயர்த்துள்ளார்கள். மநு ஸ்மிரிதியின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பிலும் இப்படிதான் உள்ளது. 

இந்தப் பிரச்சனையில் அதிமுக அமைதியாக இருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அதிமுக. தங்கள் கட்சி மற்றும் சின்னத்தை பாதுகாக்க வேறு வழியின்றி பாஜக-வை ஆதரிக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட, அவர்களுக்கு மத்திய அரசின் ஆதரவு தேவை. ஆகையால் வெறும் பார்வையாளர்களாக இருந்து அவரக்ள் சொல்படி நடந்துக் கொண்டிருக்கிறார்கள்.

2005-ல் திருமணத்திற்கு முன்பான உடலுறவு குறித்து குஷ்பு கருத்து கூறியபோது, முதலில் கண்டனம் தெரிவித்தவரக்ளில் நீங்களும் ஒருவர். அப்போது நீங்கள் எடுத்த நிலைப்பாடில்தான் இன்றும் இருக்கிறீர்களா?

இது தவறான கருத்து. எந்தவொரு மேடையிலும் நான் குஷ்பு கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. திருமணத்திற்கு முன்பான உடலுறவு குறித்து அவர் பேசியபோது, பல அமைப்புகள் போராட்டம் செய்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு பெண்கள் வட சென்னையில் போராட்டம் நடத்தினார்கள். இது எனக்கு தெரிந்ததும், இதுபோன்ற போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் இந்தப் பிரச்சனையில் கருத்து எதுவும் கூற வேண்டாம் என்றும் கண்டித்தேன். அந்த சமயத்தில் தென் தமிழகத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த நான், எங்கும் போராட்டம் நடத்த வேண்டாம் என மாவட்ட செயலாளர்களிடம் கூறினேன். இதுபோன்ற போராட்டங்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் தனது கருத்தை தெரிவிக்க குஷ்புவிற்கு உரிமை உள்ளது என்றும் இதில் கட்சி உறுப்பினர்களான நாம் தலையிடக் கூடாது என்றும் அந்த சமயத்தில் கூறியிருந்தேன். குஷ்புவின் கருத்திற்கு ஆதரவாக நான் பேசியுள்ளேன். 

ஆனால் அந்த ஒரு போராட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு, இந்த விஷயத்தில் இதுதான் என் நிலைப்பாடு என எல்லாரும் கருதுகிறார்கள். மக்கள் இன்றும் இதைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். குஷ்புவும் கூட இதை நம்பிக் கொண்டிருக்கிறார். பல மேடைகளில், யூடுயுப் சேனல்களில் மற்றும் பிற தளங்களில் இதை நான் தெளிவுப்படுத்தியுள்ளேன். பலமுறை இதற்கு விளக்கம் கொடுத்துள்ளேன். அவர் கூறியது தவறு என நான் ஒருபோதும் கூறியதில்லை. என்னுடைய கட்சி உறுப்பினர்கள் போராட்டம் செய்ததற்காக அவர்களைக் கண்டித்தேன்.

இதே கருத்தை குஷ்பு இன்று கூறினால், உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

இது அனுமானமான கேள்வி. இதற்கு நான் பதிலளிக்க முடியாது. இது தேவையில்லாத விஷயம். தங்கள் கருத்தை கூற எல்லாருக்கும் உரிமை உள்ளது. திருமணத்திற்கு முன்பான உடலுறவு சரியா தவறா என்பது இங்கு விவாதம் அல்ல. அதனால், இது இப்போதைய பிரச்சனையும் அல்ல என்பதால் இதை விவாதிக்க வேண்டாம்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள். ஆனால் ஒன்பது பெண்களால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைரமுத்து போன்றவரோடு பொதுவில் உறவாடுகிறீர்கள். இது உங்களின் நம்பகத்தன்மையை பாதிக்காதா?

எனக்கு ஆதரவாக அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனால் நன்றி தெரிவித்தேன். அவ்வுளவுதான்.

ஆனால் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதே. அதுவும் இது பெண்கள் தொடர்பான பிரச்சனை. பொதுத்தளத்தில் அவரோடு உறவாடுவது ஏற்புடையதுதானா என நீங்கள் நினைக்கிறீர்களா?

இப்பிரச்சனையில், என்னையும் என் கட்சியையும் தனிமைப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. எனக்கு எதிராக தரக்குறைவான கருத்தை அவர்கள் பரப்புகிறார்கள். இந்த நேரத்தில், எனக்கு ஆதரவு தெரிவிக்கும் யாருக்கும் பதிலளிப்பது என்னுடைய கடமை.

தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் பெண் வெறுப்பு கலாச்சாரம் அதிகளவில் உள்ளது. இந்தப் பிரச்சனையை எப்படி கையாளப் போகிறீர்கள்? 

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவனம் கொடுத்து தொடர்ந்து போராடி வருகிறது. பெண்களுக்காக பல வகையான பாதுகாப்பு மற்றும் உரிமைகளை நாங்கள் கேட்டு வருகிறோம். பெண்களுக்கு எதிராக பேசும் அரசியல்வாதி அல்லது யாராக இருந்தாலும், நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை. பெண்கள் முன்னேற்றத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இதற்காக களத்தில் வேலை செய்வதோடு பெண்கள் குழுக்கோடு சேர்ந்து பணியாற்றவும் செய்கிறோம்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை கேட்டு வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. எங்கள் கட்சியில், மாவட்ட மற்றும் மாநில செயலாளர்கள் போன்ற முக்கியமான பதவிகளில் பெண்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஆனால் உங்கள் தோழமை கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?

எனக்கு அது தெரியாது. அது அவர்களின் உட்கட்சி விவகாரம். நான் எப்படி அதில் கருத்து கூற முடியும்? அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றோ அல்லது எப்படி செய்கிறார்கள் என்பதையோ நான் கருத்து கூற முடியாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை, தலைமைத்துவ பதவிகளில் தொடர்ந்து பெண்களை ஊக்குவித்து வருகிறோம். 

Leave Comments

Comments (0)