சாதி பார்த்து காதலிக்க வற்புறுத்தும் இந்திய சமூகம்! 

/files/qwqw-2020-12-02-21:17:45.jpg

சாதி பார்த்து காதலிக்க வற்புறுத்தும் இந்திய சமூகம்! 

  • 83
  • 0

-T. செல்வமணி

கடந்த 2012 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்பவரும் செல்லம் கொட்டாய் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இளவரசன் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் திருமணத்தை தீவிரமாக எதிர்த்து வந்துள்ளனர், இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மூன்று காலனிகள் கயவர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டடு, சூறையாடப்பட்டது அதே போன்றதொரு சம்பவம் தற்போது ராமநாதபுரம் சாயல்குடியில் நடந்தேறியுள்ளது..இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடந்து வருகிறது அதில் இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 29ம் தேதி நடைபெற்றது போட்டியின் இடையே யாரும் எதிர்பாராத வகையில் ஒரு இந்திய இளைஞர், ஆஸ்திரேலிய பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார் அப்பெண்ணும் அதனை ஏற்றுக்கொண்டார். காதல் பரிசாக இருவரும் மோதிரத்தையும், முத்தத்தையும் பகிர்ந்து கொண்டனர். ஒட்டுமொத்தமாக மைதானத்தில் இருந்த அனைவரும் ஆரவாரத்தோடு அவர்களுக்கு தங்களின் வாழ்த்தை தெரிவித்தனர். அந்த காதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவிக்கொண்டிருக்கிறது இப்போது இருவரும் இணைந்து வாழ்வை தொடங்கியுள்ளனர். ஒரு இந்திய இளைஞனும், ஆஸ்திரேலிய பெண்ணும் கூட இணைந்து தங்களது வாழ்வை தொடங்குகிறார்கள் இங்கே தமிழகத்தில் தமிழனும், தமிழச்சியும் இணைவதில் ஆயிரம் சிக்கல்கள் நிறைந்திருக்கிறது அதில் முதன்மையானது சாதி. சாதியுடனே பிணைந்து வாழும் நம் மக்கள் நவநாகரீக உலகிலும் ஊர், சேரி என்கிற பிரிவு வாழ்விடங்களில் தான் இன்னும் வாழ்ந்து வந்து  சாதியத்தை கட்டி காக்கிறார்கள்!  என்கிறபோது சாதி மறுப்பு திருமணங்களை இவர்கள் அனுமதிப்பதில்லை அப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அவர்களின் குடும்பமும் உறவுகளுமே  பெரும் சிக்கல்களை கொடுத்து வருவதை நம் தமிழ்ச் சமூகம் காலம்காலமாக செய்து வருகிறது. 


தர்மபுரியில் கல்லூரியில் படித்து வந்த இளவரசனும், திவ்யாவும் காதலித்து வந்துள்ளனர். பட்டியல் சாதியைச் சேர்ந்த இளவரசனை திவ்யா காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத திவ்யாவின் பெற்றோர் இதை தீவிரமாக கண்டித்து ஏற்க மறுத்துள்ளனர். தனது காதலில் உறுதியாக இருந்த இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இளவரசன் வீட்டில்  இவர்களின் திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இளவரசனும் திவ்யாவும் நத்தம் காலனியில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தனர். திவ்யாவின் தாயார் அங்கு வந்து தனது மகளை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார் திவ்யா மறுத்துள்ளார் அதன்பிறகு அவர் சென்று விடுகிறார். திவ்யாவின் தந்தை நாகராஜ் நவம்பர் 7ஆம் தேதி தற்கொலை செய்து கொள்கிறார் இதனை காரணமாக முன்வைத்து ஆதிக்க சாதியினர் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய 3 கிராமங்களுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான வீடுகளை சூறையாடி, பல வீடுகளை தீ வைத்து எரித்துள்ளனர், பல வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர் அவர்களின் உடமைகளை பறித்துச் சென்றுள்ளனர்..
டிசம்பர் 2, 2020 


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தைச் சேர்ந்த ரம்யபிரபாவும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த குமார் என்பவரும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் இந்த நிலையில் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் திங்கட்கிழமை குமாரும், ரம்ய பிரபாவும் திருமணம் செய்துகொண்டு வெளியூருக்கு சென்று விடுகிறார்கள். இதனை காரணமாக வைத்து பெண்ணின் உறவினர்கள் குமாரின் வீடு மற்றும் அவரின் உறவினர்களின் வீடுகளுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர் 8 ஓட்டு வீடுகள் அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, நான்கு இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்துள்ளனர், ஒரு குடிசை வீட்டிற்கு தீவைத்து விட்டு தப்பித்து  ஓடிவிடுகிறார்கள். 


தகவலறிந்த சாயல்குடி போலீசார் வீடுகளை சேதப்படுத்தியதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு  செய்து அவர்களை தேடி வருகிறது... 


குரோமோசோம்களும், ஜீன்களும், ஹார்மோன்களும் மனித சமூகத்துக்கு காதலையும், காமத்தையும் கற்பிக்கிறது. 


 மனிதன் சாதியையும் மதத்தையும் வாழ்வியலோடு இடைச்செருகல் செய்ததை அறியாத ஹார்மோன்கள் பாவம் என்ன செய்யும்!

 

காதலைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகம் தான் சாதியை தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது அதை கௌவரவமாக எண்ணி கொலை செய்வதைக் கூட புனிதமாக அங்கீகரிக்கிறது. கொலையில் என்ன கவுரவம் இருக்கிறது? இந்த உளவியல் இளைய தலைமுறையை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை நம் மூத்த தலைமுறையினர் இன்றுவரை உணரவே இல்லை. 


அன்பை, நட்பை, காதலை மனங்கள் முடிவு செய்யட்டும். மதங்களும், சாதிகளும் மக்கி குப்பை தொட்டியில் போட்டு விட வேண்டாம் அதுவும் அசுத்தமாகி விடும் மாறாக அவைகள் மறைந்து போய்விடட்டும். 2013 ஆம் ஆண்டு இளவரசன் மரணத்தை விசாரிக்கும் விதமாக ஜூலை 8 தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. 


2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை ஆணையம் தனது விசாரணை அறிக்கை வழங்குகிறது ,விசாரணையில் எத்தனை வேகம் பாருங்கள் இப்படியான தாமதங்கள்  அடுத்தடுத்து இது போன்ற வன்கொடுமைகளுக்கு வழிவகுக்கிறது. சாதி மறுப்பு காதல் திருமணம் செய்யும் இணையர் களுக்கு கேரள அரசு பாதுகாப்பு வழங்குவோம் என்று அறிவித்துள்ளது இதனை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். சாதி மறுப்பு சமத்துவ திருமணம் செய்யும் இணையர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் பொது மக்களின் கடமை. 


உலகில் எங்கு எங்கெல்லாம் நல் மாற்றங்கள் நடந்துள்ளதோ! அதற்கெல்லாம்  அடித்தளமிட்டது  அங்குள்ள ஊடகங்கள் தான் அப்படி மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்த வேண்டிய ஊடகங்கள் அறம் அற்று வியாபாரத்தையே நோக்காக கொண்டு செயல்படுவது பெரும் அபத்தம். 


காதலுடன் பெண் ஓட்டம்! 


வீடுகளை சூறையாடிய கும்பல்! 


அப்பாவி சிறுமியும்! 


50 அரக்கர்களும்! அந்தத் தொழிலுக்கு 50 குழுக்கள்! 


பெண்ணை இன்ப விருந்தாக்கிய காவலர்! 

இப்படியெல்லாம் இழிவாக செய்தி வெளியிடுகிறார்கள் தமிழகத்தின் பெரு ஊடகங்கள்! 


இப்போதுதான் கற்பழிப்பு என்கின்ற வார்த்தை பயன்பாடு குறைந்து பாலியல் வன்கொடுமை, வன்புணர்வு என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் அதற்குள் இப்படி அற்பமாக எழுதும் செய்தி ஊடகங்களின் அறமற்ற இந்த செயல்கள் கண்டிக்கதக்கது. இவர்களை மக்கள் நிச்சயம் புறம் தள்ள வேண்டும். ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குவதற்கும் இரு தரப்பினரிடையே மோதல் என்று தானே தலைப்பு வைக்கிறார்கள்! 


இது எந்த வகையில் நியாயம்? ஊடகங்களின் ஒழுங்கு தான் மக்களையும் ஒழுங்குபடுத்தும் என்பதை ஊடகங்கள் உணர்ந்து செயல்படுவது தான் அறம்..


பெண்ணை கடவுளாக வழிபடுவதும், பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொல்வதும், மாற்று சமூக ஆணை காதலித்தாள் என்ற காரணத்தால் தந்தையே மகள்களை வெட்டிக் கொலை செய்வதும் 

நம் தமிழ்ச் சமூகத்தின் ஆணாதிக்க முகத்தின் ஆணவ(அவமான) குறியீடு...


Leave Comments

Comments (0)