ஆன்லைன் வகுப்பால் பாதிப்புக்குள்ளாகும் பெண் குழந்தைகளின் கல்வி

/files/12 2020-10-13 18:27:55.jpg

ஆன்லைன் வகுப்பால் பாதிப்புக்குள்ளாகும் பெண் குழந்தைகளின் கல்வி

  • 14
  • 0

ஜிக்யாசா மிஸ்ரா

தமிழில்: கோபி


“இந்த ஆறு மாதத்தில் எந்தப் பாடப்புத்தகத்தையும் நான் வாசிக்கவில்லை. நான் படிக்கும் பள்ளியை மார்ச் மாதம் மூடினார்கள். அதன்பிறகு என்னால் படிக்க முடியவில்லை” எனக் கூறுகிறார் 14 வயதான கீர்த்தி யாதவ். ஜூன் மாத கடைசி வாரத்திலிருந்து தனது அம்மாவோடு சேர்ந்து பழத்தோட்டத்தில் மாங்காய் பறிக்க செல்கிறார் கீர்த்தி. 

“அந்த சமயத்தில் என் அம்மா எந்த வேலைக்கும் செல்லவில்லை. இப்போது மறுபடியும் வீட்டு வேலைக்குச் செல்கிறார். அதனால் மற்ற வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்கிறார். இவர்கள் குடும்பத்தில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே உள்ளது. அதுவும் இவளது சகோதரனின் ஆன்லைன் வகுப்பிற்கு உதவுகிறது. 

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதிலிருந்து, 14 வயதான கீர்த்தி யாதவ் தன் அம்மாவிற்கு உதவியாக விவசாய வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள ஷர்வாஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி யாதவ். கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி மூடப்படுவதற்கு முன்பே தனது எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்துவிட்டார் கீர்த்தி.  

வீட்டில் உள்ள ஸ்மார்ட்போனை ஆண் பிள்ளைகள் பயன்படுத்துவதால், ஷர்வாஸ்தி மாவட்டம் போன்ற கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் கீர்த்தி யாதவ் போன்ற பெண் குழந்தைகளால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை. இது பெண்கள் கல்வியறிவில் மேலும் பெரிய இடைவெளியை உருவாக்குகிறது.

தன்னுடைய கிராமத்தில் சிறிய டீக்கடையும் பெட்டிக் கடையும் நடத்தி வருகிறார் பானு யாதவ். இதற்கு வாடகையாக மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார். “எங்கள் வீட்டிற்கு அருகில் 500 சதுர அடி அளவிற்கு எங்களுக்குச் சொந்தமாக நிலம் உள்ளது. ஆனால் அதில் விளையும் காய்கறிகள் விற்பனைக்கு போதுமானதாக இல்லை. எங்கள் நால்வருக்குமே சரியாக இருக்கிறது.”

“எங்களுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி பெனாரஸில் வசிக்கிறாள். இளையவர்களான கீர்த்தியும் ரோகித்தும் எங்களோடு இருக்கிறார்கள்” என நம்மிடம் கூறுகிறார் கீர்த்தியின் தந்தாய் பானு யாதவ். அவருடைய குழந்தைகளில் ரோகித்தே இளையவர்.

“ஊரடங்கிற்கு முன்பு இருவரையும் தனியார் பள்ளியில் சேர்த்திருந்தேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையும் எங்கள் நிலைமையும் இருவரையும் படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளது. என்னுடைய உறவினர்களிடம் கடன் வாங்கி மகனை மட்டும் பள்ளியில் சேர்த்துள்ளேன்” என்கிறார் பானு யாதவ்.

கொரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளை மூடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டதை அடுத்து, பள்ளிகளும் கல்லூரிகளும் ஆன்லைன் வகுப்பை நடத்தி வருகின்றன. ஆனால் ஸ்மார்ட்போன் மற்றும் கணினி இல்லாத மாணவர்களுக்கு மாற்று வழியை யாரும் செய்யவில்லை. இதன் காரணமாக பெண்களிடம், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் பெரும் இடைவெளி உருவாகியுள்ளது.

உலகளவில் பெண்களை விட 200 மில்லியன் ஆண்கள் அதிகமாக இணைய வசதியை பெறுகிறார்கள் என்றும் மொபைல் போன் பயன்படுத்துவதில் ஆண்களை விட 21% குறைவாகவே பெண்கள் உள்ளார்கள் என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான வித்தியாசம் இணைய பயன்பாட்டில் மட்டும் இல்லை. கல்வியறிவிலும் அப்பட்டமாக தெரிகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, உத்தரபிரதேச மாநில பெண்கள் கல்வியறிவு 59.26%, ஆண்களின் கல்வியறிவு 79.24%.

In the rural areas of Uttar Pradesh, 8,425,790 girls from class I to XII are enrolled, which is 46.6% of the total students enrolled in rural areas of the state. The number of girls enrolled in rural areas of the country is 63,057,935, about 45% of the total enrolled students in rural areas.

உத்தரபிரதேச கிராமப் பகுதிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 8, 425, 790 பெண் குழந்தைகள் படிக்கின்றனர். இது மாநிலத்தின் கிராமப் பகுதியிலிருந்து படிக்கும் மொத்த குழந்தைகளில் 46.6%. நாட்டில் கிராமப் பகுதியிலிருந்து பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 63,057,935. இது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 45%.

இப்போதைய சூழல் பெண் குழந்தைகளுக்கு மிகவும் அபாயகரமாக உள்ளது. இடை நிற்றல் விகிதமும் இளைய வயதில் திருமணமும் அதிகரித்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் குறைவான பெண்கள் கல்வியறிவு கொண்ட மாவட்டங்களில் உத்தரபிரதேசத்தின் ஷர்வாஸ்தி ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு 10-17 வயதுள்ள பெண்களில் 25.5 சதவிகிதத்தினருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது.

தனது குடும்பம் கூறியபடி தண்ணுடைய படிப்பைப் பாதியிலேயே நிறுத்த முடிவு செய்துள்ளார் வைஷ்னவி யாதவ். “இந்த மார்ச் மாதத்தில் என்னுடைய பள்ளிப் படிப்பை அரசுப் பெண்கள் கல்லூரியில் முடித்தேன். அடுத்து பதினொறாம் வகுப்பு சேர வேண்டும்” என்கிறார் வைஷ்னவி. 

வைஷ்னவி பெற்றோர்கள் தையல் வேலை பார்க்கிறார்கள். 16 வயதான வைஷ்னவியே மூத்தவள். அவளுக்கு அடுத்து ஒரு தங்கையும் தம்பியும் இருக்கிறார்கள். “எனது படிப்பை நிறுத்திவிட வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எப்படியிருந்தாலும் இன்னும் இரண்டு வருடத்தில் என் பெற்றோர்கள் எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்” என அவர் கூறுகிறார். 

போதிய சத்துணவு இல்லாமை

பள்ளிக்குச் செல்லாததன் காரணமாக, கல்வியை இழப்பதோடு மற்றொரு பிரச்சனையும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவில் பருப்பும் காய்கறியும் கிடைக்கும். ஆனால் இப்போது அவர்களுக்கு வீட்டில் அரிசி அல்லது ரொட்டி மட்டுமே கிடைக்கிறது

“சில நாட்கள் ரொட்டியுடன் வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கை வைத்து சாப்பிடுவோம். எப்போதாவது பருப்பு கலந்த சாதம் சாப்பிடுவோம். பள்ளியில் எங்களுக்கு பல விதமான காய்கறிகளும் கிச்சடியும் கிடைக்கும். மறுபடியும் பள்ளிக்குச் செல்ல எனக்கு ஆசையாக இருக்கிறது” என்கிறார் வைஷ்னவியின் இளைய சகோதரி குடியா. எட்டு வயதாகும் குடியாவிற்கு தங்கள் பள்ளி ஏன் நீண்ட நாள் மூடியிருக்கிறது என்பது தெரியவில்லை.

UNICEF, தெற்கு ஆசியாவின் பிராந்திய கல்வி ஆலோசகர் ஜிம் ஆக்கர்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “நீண்ட நாட்கள் பள்ளிகளை மூடியிருப்பதால் பெண் குழந்தைகள் மற்றும் உடல் குறைபாடு கொண்டவர்கள்  பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அந்தக் கவலை எங்களுக்கு உள்ளது. பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளை செய்யவும் உடன் பிறந்தவர்களை கவனித்துக் கொள்ளவும் நிர்பந்திக்கப்படுவார்கள்.”

“ஊரடங்கு சமயத்தில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் குழந்தைகளின் மீதான உளவியல் தாக்கம் குறித்தும் நாங்கள் கவலைக் கொண்டுள்ளோம்” என ஆக்கர்ஸ் கூறியுள்ளார்.

இருமுறை பள்ளியிலிருந்து நோட்டீஸ் வந்தும், இன்னும் ஒருமுறை கூட அஞ்சு சோலாங்கி (13) ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளவில்லை. “அஞ்சுவின் வீட்டுப் பாடத்தை போனில் அனுப்ப உள்ளோம். அதனால் உங்கள் போன் நம்பரை தாருங்கள் என கேட்பதற்காக அவளின் ஆசிரியர் வீட்டிற்கு வந்திருந்தார்கள்” எனக் கூறுகிறார் அஞ்சுவின் தாயார் ரமாபாய்

“எங்கள் போன் நம்பரை கொடுத்துள்ளோம். ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்க எங்களிடம் எந்த ஸ்மார்ட்போனும் இல்லை. பள்ளி திறந்ததும் அவர்கள் படிப்பார்கள். எங்கள் வாழ்க்கையை ஓட்டவே பெரும் பாடாக இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அவளது படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து புது போன் வாங்கும் நிலைமையில் நாங்கள் இல்லை” என்கிறார் ரமாபாய். 

ரமாபாய் சோலாங்கி (41) அருகிலுள்ள நகரத்தில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு விபத்தொன்றில் இவரது கனவர் இறந்துவிட்டார். தற்போது தனது தாயார் மற்றும் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் அவர் மட்டுமே இப்போது சம்பாதித்து வருகிறார்.

“இவர்களது அப்பா எந்த பணமும் சேர்த்து வைக்காமல் எங்களை அநாதையாக விட்டுச் சென்றுவிட்டார். அரசுப்பள்ளியில் கட்டணம் கிடையாது என்பது எனக்கு தெரியும். ஆனாலும் சீருடை, பாடப்புத்தகம் மற்றும் இதர பொருட்கள் வாங்க என்ன செய்ய? அவள் படிக்க வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனால் என்னால் ஆன்லைன் வகுப்பிற்கு செலவழிக்க முடியவில்லை. எங்களைப் போன்ற ஏழை குழந்தைகளுக்கு ஏன் அரசாங்கம் உதவி செய்வதில்லை?” என்கிறார் ரமாபாய் சோலாங்கி.

Leave Comments

Comments (0)