மலக்குழி மரணங்களுக்கு நிரந்தர தீர்வா?

/files/reee-2020-11-22-18:49:11.jpg

மலக்குழி மரணங்களுக்கு நிரந்தர தீர்வா?

  • 40
  • 0

- T.செல்வமணி


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவு இந்தியாவில் முடிவுக்கு வருகிறது. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் கொண்டுவந்துள்ள சட்டத்தின் படி கழிவுகளை அகற்ற இனி இயந்திரங்கள் கட்டாயம்! 


இப்படியான ஒரு அறிவிப்பு இன்று செய்திகளில் வெளிவந்தது, மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் உண்மையிலேயே சமூகநீதியை காப்பதற்கான ஒரு நடவடிக்கையை தான் மேற்கொண்டுள்ளது இதை நிச்சயம் நாம் பாராட்டியே ஆகவேண்டும் ஆனால் இது மிக நீண்ட தாமதத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு என்பதே வருந்தத்தக்கது..


நாம் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறோம் எதர்ச்சையாக நம்மை அறியாமல் எதேனும் ஒரு மிருக கழிவை நாம் மிதித்து விட்டோம் என்றால் அதை எத்தகைய அருவருப்பாக உணர்கிறோம். அன்றைய நாள் நம்மால் நிம்மதியாக சாப்பிட முடியுமா? ஆனால் பல ஆண்டுகளாக மனித மலத்தை சகமனிதனே அள்ளிக் கொண்டு தான் இருக்கிறான் அவர்களின் நிலையை கொஞ்சம் நாம் நினைத்து பார்த்தோமா? விழுப்புரம் மாவட்டம் காகுப்பத்தில் உள்ள பாதாள சாக்கடைக்குள் சுத்தம் செய்ய மாநகராட்சி நிர்வாகத்தால்  இறக்கப்பட்ட மாரி என்ற ஒப்பந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலியானார், இறந்த அவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் கர்ப்பமான நிலையில் மனைவியும் உள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் இந்தியாவில் ஏதோ ஒரு மூளையில் பாதாள சாக்கடைக்குள் இறங்கும் ஒரு ஒப்பந்த தொழிலாளி இறந்து கொண்டுதான் இருக்கிறார். 


2014யில் இருந்து இப்போது வரை 1790 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பாதாள சாக்கடையிலும், மலக்குழியிலும் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள்... ஐம்பது வயதை கடந்த ஒரு பெண் கூறியதாவது, செத்தாலும் பரவாயில்லை நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னு குழிக்குள்ள இறங்கினாங்க, உங்க புள்ளைங்க எல்லாம் நல்லா படிக்கணும் உங்க வீட்ல ஏதாவது அடைப்பு இருந்தா எங்க வீட்டு பிள்ளை குழிக்குள்ள இறங்கணும், உங்க வீட்டில அடைப்பு இருந்தால் உங்க பிள்ளைய  குழிக்குள்ள இறக்குவிங்களா? என ஆவேசத்தோடு அழுதுகொண்டே அந்த அம்மா கூறுகிறார். 


2015 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் மதுரையில் நிகழ்ந்த சம்பவம், பாதாளச் சாக்கடை அடைப்பு எடுக்க குழிக்குள் இறங்கி விஷவாயு தாக்கி இறந்த இரண்டு பேர் மரணத்தையும், அவர்களில் முனியாண்டி என்பவரின் மனைவி மகாலட்சுமி கதறி அழுத காட்சியையும் பார்த்த பிறகுதான் தோழர் திவ்யபாரதி கக்கூஸ் என்கிற ஆவணப் படத்தையே எடுத்தார். தூய்மைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த துயரமும் அதில் முழுமையாக காட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும் மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதர்கள் சாகும்போதும் தினம் வரும் அந்த செய்தி  நம் மனதை கனக்கச் செய்வதில்லை நாம் மிகச் சாதாரணமாக கடந்து செல்கிறோம். இதை எதிர்த்து பலமுறை சமூக செயல்பாட்டாளர்கள் போராட்டங்கள் நடத்திக் கொண்டே தான் வந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மரணங்களுக்கு பிறகு, பல போராட்டங்களுக்குப் பிறகு, பல ஆண்டுகளுக்குப் பிறகு, ரொம்ப தாமதமாக தான் இந்த அரசு மலக் குழிக்குள் மனிதர்களை இறக்க கூடாது, இயந்திரங்களை பயன்படுத்துவது கட்டாயம் என்று சட்டம் இயற்றி இருக்கிறது. என்னதான் சட்டம் வந்தாலும் இது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும்!? என்பது கேள்விக்குறிதான் இப்படி இத்தனை அவலத்தையும் சுமக்கும் இவர்கள் மீது கூட வைக்கப்படும் மிக முக்கிய விமர்சனம் காசுக்காக இப்படி வேலை செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள் அப்படிக் கூறுபவர்கள் காசுக்காக இந்த வேலையை செய்வார்களா? 


தூய்மை பணியாளர்களும், பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்களும் தலித்துகள், பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணம்தான் அவங்க செத்தா என்ன அதை விட கொடுமை மலத்தை அள்ளினால் என்ன என்று இத்தனை ஆண்டுகள் மவுனம் காத்த பொது சமூகத்தின் மனநிலை. 


வெறும் சட்டம் மட்டும் முழுமையான தீர்வல்ல சட்டம் ஓர் கவசம், பாதுகாப்பு அதை சரியான வழியில் கடைபிடிக்க வேண்டியது மக்களின் கைகளில் தான் உள்ளது. நாடு முழுக்க கழிப்பறை கட்ட பல கோடி ஒதுக்கும் மோடி அரசு மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு எத்தனை கோடி ஒதுக்கினார்? டெல்லியில் ஒரு பெரிய மண்டபத்தில் தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து பாத பூஜை நடத்திய அதே மோடி ஒரு முறை பேசுகிறார், மலம் அள்ளுவது கடவுளுக்கு தொண்டு செய்யும் பணி அதை அம்மக்களே ஏற்றுக் கொள்கிறார்கள் என்று இதன் உள்நோக்கம் என்ன தெரியுமா? கடவுள்தான் சாதிக் கட்டமைப்பை படைத்தார் என்று பொய் சொல்லி இத்தனை ஆண்டுகள் சாதி இழிவை மக்கள் மீது சுமத்தினார்களே, அதே பாணியில் கடவுள் தான் உன்னை அடிமை தொழில் செய்ய சொன்னார், மலம் அல்ல சொன்னார் என்று சொன்னால் மக்கள் கேள்வி கேட்காமல் அந்த தொழிலைச் செய்வார்கள், என்ற கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளது  பார்ப்பனியம். 


அவர்கள் கூற்றுப்படி பார்ப்பனரை தவிர்த்து அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள், கீழானவர்கள் தான் இதை இந்த பொது சமூகம் என்றும் உணர்த்ததேயில்லை, கடவுளின் ஆசி வேண்டும் என்றால் அவர்கள் இத்தொழிலை செய்ய முன்வருவார்களா? 


இனியும் இந்த அவலங்கள் நம் மண்ணில் நடந்திடக் கூடாது கொரானா காலத்தில் பல நாட்கள் ஓயாது உழைத்த போது தூய்மைப் பணியாளர்களை பாராட்டிய இந்த சமூகம் அடுத்த சில நாட்களிலேயே அவர்களை எளிதில் மறந்து விட்டது. அவர்களுக்கு பாராட்டு தேவையில்லை, சக மனிதர்கள் என்ற அங்கீகாரம், சம உரிமை, வேலைக்கு ஏற்ற ஊதியம் மற்றும் அரசாங்க வேலை தான் தேவை என கேட்கிறார்கள். 

ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் துப்புரவு பணி உள்ளது, இதில் குறைவான கூலி மாதஇறுதிவரை ஊதியம் தராமல் இழுத்தடிப்பு அதிலும் இடைத்தரகர்கள் பிடித்தம் செய்து கொண்டு மிச்சம் உள்ள சொச்ச பணத்தை மட்டுமே கொடுக்கிறார்கள். அவர்கள் பணி செய்ததற்கான ஊதியம் பெற்றதற்கான எந்த ஆவணமும் இன்றுவரை சரியாக இருந்ததில்லை, இப்படி அவர்கள் படும் இன்னல்களை எந்த அரசாங்கமும் கண்டு கொள்வதில்லை. 


துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று பெயர் மாற்றிய அரசு அவர்கள் இன்று வரை தொகுப்பு ஊழியர்களாக தனியார் நபர்களிடம் சம்பளத்தில் வேலை பார்க்கும் அவலத்தை நீக்க தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அங்கீகாரம் கொடுத்து அவர்களுக்கு ஏற்ற ஊதியம் வழங்கிடுமா ? பாதாள சாக்கடை, மலக்குழி இவைகளில் மனிதர்களை பயன்படுத்துவதும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியான ஒரு கைது நடவடிக்கை இதுவரை யாரும் எங்குமே பார்த்திருக்க முடியாது அப்படி ஒரு கைது நடந்தால் தான் அப்படியான அநீதி செயலை செய்பவர்களுக்கு ஓர் அச்ச உணர்வு வரும். மலக்குழியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க படவேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்கு என்று அரசு தனி நிதி ஒதுக்கிடல் வேண்டும். 


நாம் சுத்தமாய் வாழ நமது சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய இவர்களை நாம் எந்த இடத்தில் வைத்துள்ளோம் சாதியின் பெயரால் இவர்களை ஒதுக்கி இவர்களுக்கான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு ஒரே ஒரு கதவை மட்டும் மனசாட்சி இல்லாமல் திறந்து மனித மலத்தை மனிதர்களே அள்ள வைக்கிறோம். இது தொழில் அல்ல அவமானம். தோழர் நடிகர் சத்யராஜ் ஒருமுறை மேடையில் பேசியிருப்பார், சாக்கடைக்குள் அனுப்ப எந்திரம்  கண்டுபிடிக்கவில்லை என்று பிதற்றுவார்கள், நான் ஒரு யோசனை கூறுகிறேன் ஒரு நாளைக்கு ஒரு சாதி என்று எல்லா சாதிகாரர்களையும் அல்ல சொன்னால் அடுத்த நாளே இயந்திரம் கண்டுபிடித்து விடுவார்கள் என்று கூறியிருப்பார் உண்மையும் அதுதான். மனித மலத்தை மனிதனே அள்ளுகிறான் அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வராததற்கு காரணம் அவர்களை மனிதர்களாக நாம் பார்த்தால் தானே? அவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் தானே! என்கிற மன அழுக்கு. இந்த அக்கிரமத்திற்கு சட்டமும் இயந்திரமும் மட்டும் தீர்வல்ல...


இத்தனை தலைமுறைகளாக நாம் செய்த அநீதிகளை துடைத்தெறிய நிச்சயம் அடுத்த தலை முறையில் நல்மாற்றம் வேண்டும்  தூய்மைப் பணியாளர்கள், மலக்குழியில் இறங்கி வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள், பாதாள சாக்கடையை சுத்தம் செய்பவர்கள் இவர்களின் பிள்ளைகள் எல்லாம் படித்து பட்டம் பெறட்டும் இயந்திரம்  மனித கழிவை  சுத்தம் செய்யட்டும்...

Leave Comments

Comments (0)